பொதுக்காலம் 33ஆம் வாரம் – திங்கள் 16 11 2020

 

 

 

முதல் வாசகம்

 

நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு.

 

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 1-4; 2: 1-5a

 

சகோதரர் சகோதரிகளே,

இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வான தூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார். இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறுபெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணை முன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

“எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தமது வலக் கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழு பொன் விளக்குத் தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின் பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு; முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

 

 

பதிலுரைப் பாடல்

 

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: திவெ 2: 7b)

 

பல்லவி: வாழ்வு தரும் மரத்தின் கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.

 

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

 

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

 

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

 

 

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

 

 

 

நற்செய்தி வாசகம்

 

ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

 

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

 

அக்காலத்தில்

இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

அவர் நெருங்கி வந்ததும், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.

அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

“GOD IS LOVE”