🛐🛐🛐🛐🛐 
இன்றைய இறைவார்த்தை சிந்தனைகள்

🔥 பகிர்வு- 9️⃣3️⃣ 🔥 
         03.08.2020

✝️✝️ இறைவா! போலிகளுக்கும், புகழ்ச்சிக்கும் மயங்காத மனம் தா ✝️✝️

📖 முதல் வாசகம்:
        எரேமியா 28 : 1 -17
        நற்செய்தி வாசகம்:
      மத்தேயு 14 : 22-36  📖

இறையேசுவில் இனியவர்களே!

நாவில் தேன் வைத்து பேசும் மனிதர்களை நம்பி, பல நேரங்களில் அடியெடுத்து வைத்து பள்ளத்தில் விழும் நமக்கு எச்சரிக்கை விடுப்பதாக  இன்றைய இறைவார்த்தை வழிபாட்டு கொண்டாட்டம் அமைகின்றது. நெல்லிக்கனியை விட வேப்பம் பழம் குருவிகளுக்கு அதிகம் பிடிக்கிறது, அவை மென்மையாக இருப்பதனால்.
நிரந்தர தீர்வுகளை விட அவசர தீர்வுகளை விரும்பி கேட்கின்றோம், அவை காயங்களை ஆற்றுவதை விட்டுவிட்டு காயங்களை மறைத்து விடுவதால்...
இதே போல் தான் இன்றைய முதல் வாசகத்தில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து போலிகளை நம்பி  இஸ்ரயேல் மக்கள் செயல்பட்டு பாவத்திற்கு மேல் பாவம் செய்ய இருப்பதை இறைவாக்கினர் எரேமியா சுட்டிக்காட்டுகிறார்.
அனனியா போலி இறைவாக்கினராக செயல்பட்டு தன் கவர்ச்சிகரமான பேச்சால் மக்களை தன்வசப்படுத்துகிறார். 
நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரை பொறுத்தவரை அவரது வாக்கு நிறைவேறும்பொழுது தான் ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பி உள்ளார் என தெரியவரும். போலி இறைவாக்கினர் அனனியாவை இறைவாக்கினர் எரேமியா எச்சரிப்பதை இறைவாக்கினர் அனனியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 
எனவே மக்களை தூண்டி உணர்ச்சி வசப்பட செய்கிறார்.
இந்த நயவஞ்சகதனத்தை தான் இன்று பல பிரிவினை சபை சகோதரர்களும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இயேசு விடுவிக்கிறார், கதவு விக்கிறார், அங்கே நிற்கிறார், பத்திலொரு தசமபாகம் கேட்கிறார், திருச்சிக்கு வருகிறார், இரட்சிக்கப் போகிறார் என கவர்ச்சிகரமான வார்த்தைகளை கையிலெடுத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அவசர தீர்வுகளை எடுக்க வைப்பதில் முனைப்புடன் செயல்படுகிறார்கள்.
நிரந்தர அழகு தரும் மஞ்சள் கையில் இருக்க, fair and lovely  வாங்கி பூசி 40 வயதில் முகசுருக்கத்துடன் அடுத்த வைத்தியம் பார்ப்பது போன்று பலநேரங்களில் போலிகளை நம்பி அன்னையாம் திரு அவையின் போதனைகளை மறந்துவிடுகிறோம்.
புதுமைகளை விரும்பும் உலகம், உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறந்து போகிறது. 
புதுமைகள் தங்களுக்குள்ளே மறைந்து தான் இருக்கிறது என்பதை கண்டுகொள்ள தவறிவிடுகிறது.
இதைத்தான் நற்செய்தி வாசகத்தில் பேதுரு செய்கிறார்.
இயேசுவை நம்பி கடல்மீது நடந்தவர் எதிர்வரும் அலையை கண்டு அஞ்சுகிறார்.
துணிவோடிரு! என்ற இயேசுவின் குரல் கேட்டு தன்னை உணர்ந்தவராய் இயேசுவை அறிந்து கொள்கிறார்.
நாமும் புதுமைகளை மட்டுமே நம்பி பிற இன சகோதரர்களைப் நாடி தேடி ஓடாமல் எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நமக்குள்ளே வளரட்டும்.   புதுமைகளை கண்டுகொள்ளும் நம்பிக்கையை வளர்த்திட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

செபிப்போம்:
 
நம்புங்கள் நல்லது நடக்கும் என்ற இறைவா!  உம்மை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு போலிகளையும் புகழ்ச்சிகளையும் நம்பி ஏமாந்து போகாமல் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றிட இறைவா வரம் தாரும், ஆமென்.